திருப்பூரில் தமிழக தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: பிஹாரைச் சேர்ந்த இருவர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் தமிழகத் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 26ம் தேதி தமிழகத் தொழிலாளியை, வடமாநிலத் தொழிலாளர்கள் விரட்டுவது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான பலரும் கருத்துகளை முன் வைக்கத் தொடங்க தமிழக அளவில் இந்த விஷயம் சர்ச்சையானது.

இந்த நிலையில் அந்த வீடியோ முற்றிலும் வதந்தி என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை, சிலர் சித்தரித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டுள்ளனர் என்றும் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து பிஹாரை சேர்ந்த ரஜத்குமார் (24) மற்றும் பரேஷ் ராம் (27) ஆகிய 2 பேரை இன்று கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (சட்ட விரோதமாக ஒன்று கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294 (பி) - பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் - அப் குழுக்களில் தவறான பதிவுகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in