

கோவை: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ரூ.84 ஆயிரத்தை திருடிய சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை, சிங்காநல்லூர் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் கலைச் செல்வி (24). கோவை அரசு கலைக் கல்லூரியில் முனைவர் படிப்பு மேற்கொண்டு வருகிறார். சிங்காநல்லூரில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்தில் தனது தாயுடன் பயணித்த இவர், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார்.
அப்போது அவரது மணிபர்சை காணவில்லை. அதில், 2 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.84,450 ரொக்கம் உள்ளிட்டவை இருந்தன. மீண்டும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது அங்கு நின்ற இரு பெண்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்களை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை வீதியை சேர்ந்த லட்சுமி(40), சித்ரா(30) என்பதும், கல்லூரி மாணவியிடம் பர்சை திருடியதும் தெரியவந்தது. ரொக்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீட்ட போலீஸார் இரு பெண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.