Published : 29 Jan 2023 04:37 AM
Last Updated : 29 Jan 2023 04:37 AM
வேலூர்: வேலூர் பாலமதி மலையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பமாக காதல் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த உதவி காவல் ஆய்வாளரின் மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் இருப்பதை பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் காலை பார்த்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் யார்? என முகத்தை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததால் 2 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அந்த பெண்ணின் சுடிதாரில் ரத்தக்கறையுடன் இருந்த தற்கொலை கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த குணபிரியா (22) என்பது தெரியவந்தது.
அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து விசாரித்ததில் குணபிரியா, வேலூர் உட்கோட்டத்தில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபுவின் மகன் கார்த்தி (22) என்பவரை ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஏ.சி மெக்கானிக் படிப்பை முடித்துள்ள கார்த்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்கள் வேலை செய்து வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக குணபிரியா வுடன் முதலில் கார்த்தி பழகியுள்ளார். செவிலியர் படிப்பை முடித்துள்ள குணபிரியா, இருவருக்கும் காதலாக மாறி யுள்ளது. ஓராண்டுக்கு முன்பு இரண்டு வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி குணபிரியாவை வள்ளிமலையில் வைத்து கார்த்தி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
காதல் மனைவியுடன் ஓட்டேரி பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் கார்த்தி தங்கியிருந்துள்ளார். கார்த்தி வேலைக்கு செல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெற்றோர் எதிர்ப்பால் குணபிரியாவும் கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார். சிதம்பரம் அருகேயுள்ள குள்ளஞ் சாவடி பகுதியில் இருக்கும் சித்தி வீட்டுக்கு குணபிரியா சென்று தங்கியுள்ளார்.
இதற்கிடையில், 6 மாதம் கர்ப்பிணியாக இருந்த குணபிரியா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கார்த்தியின் தாயை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் 3 வாரத்துக்குள் கார்த்தியின் தந்தையிடம் பேசி இருவரையும் வீட்டுக்கு அழைத்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். அதை நம்பிய குணபிரியா ஊருக்கு சென்றுள்ளார்.
3 வாரங்கள் கடந்த நிலையில் வியாழக்கிழமை இரவு குணபிரியா மீண்டும் வேலூர் வந்துள்ளார். வழக்கம் போல் நண்பர் வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல கார்த்தி முயன்றுள்ளார். அங்கு செல்ல மறுத்தவர் கார்த்தியின் வீட்டுக்கு மட்டுமே செல்வேன் என கூறியுள்ளார். அவரை சமாதானம் செய்த கார்த்தி வழக்கமாக செல்லும் பாலமதி மலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் மீண்டும் வீட்டுக்கு செல்வது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நாளை உன் வீட்டுக்கு சென்று உனது தந்தையுடன் பேசப்போகிறேன் என குண பிரியா கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் அங்கிருந்த கட்டையால் குணபிரியாவின் தலையில் அடித்துள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்தவர் அங்கேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த கார்த்தி அங்கிருந்து சென்று விட்டார் என தெரியவந்தது. இதையடுத்து, கார்த்தியை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
தற்கொலை கடிதம்: குணபிரியாவின் சுடிதாரில் இருந்த ரத்தக்கறை படிந்த கடிதத்தை காவல் துறையினர் படித்தனர். அதில், காதல் திருமணம் செய்துகொண்டது குறித்தும் கார்த்தியின் வீட்டுக்கு செல்ல முயன்றது குறித்தும் எழுதி யுள்ள குணபிரியா, இந்த முறை கார்த்தியின் வீட்டுக்கு செல்ல முடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எழுதியுள்ளார். அந்த கடிதம்தான் இந்த வழக்கில் கார்த்தியை அடையாளம் காட்ட உதவியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT