

அரூர்: பொம்மிடி பகுதியில் ஒரே நாளில் 10 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 கடைகளில் திருட்டு நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மிடி நகர பகுதியில் ஐஸ்கிரீம் கடை, கணினி மையம், மளிகைக் கடை, ஜவுளிக் கடை, மரப்பட்டறை, பேக்கரி, கண் கண்ணாடி கடை, சோபா கடை உள்ளிட்ட 10 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார், எவ்வளவு பணம் திருட்டு போயுள்ளது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருட்டு நடந்த கடைகளில் கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இதில், ஐஸ்கிரீம் கடையில் புகுந்த மர்ம நபர்கள் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்த பெட்டியில் இருந்து ஐஸ்கிரீம் எடுத்து வந்து சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் முகம் தெளிவாக பதிவாகியுள்ளதால் விரைவில் மர்ம நபரை பிடித்துவிட முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.