

திருப்பத்தூர்: தமிழக அரசால் தடை செய்யப் பட்ட போதைப் பொருட்களை திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் விற்பனை செய்ததாக 13 பேர் மீது காவல் துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த காவல் உட் கோட்டத்துக்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக் கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ ‘கூல் லிப்’ என்ற போதைப்பொருளை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை முழுமை யாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தடையை மீறி விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களை காவல் துறையினர் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களை குறி வைத்து ‘கூல் லிப்’ எனப்படும் போதைப்பொருள் விற்பனை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவலர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடு பட்டனர். அதில், ஒரு சில இடங்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் மாவட்டம் முழுவதும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதில் காவல் துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். மாணவர்களை போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்க முயற்சிக்கும் நபர்களை அடையாளம் காணப்பட்டால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்வது தெரியவந்தால் கடைக்கு ‘சீல்’ வைப்பதுடன், கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.