Published : 27 Jan 2023 06:28 AM
Last Updated : 27 Jan 2023 06:28 AM

காரைக்காலில் தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் 6 பேரை தாக்கி கழுத்தை அறுத்துக்கொண்ட பெண்: பெண் குழந்தை, மூதாட்டி உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் 6 பேரை மண்வெட்டியால் தாக்கிய பெண், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் 3 மாத பெண் குழந்தை, மூதாட்டி உயிரிழந்தனர்.

காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா லட்சுமி(35). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதனிடையே, கர்ப்பமாக இருந்த துர்கா லட்சுமி, பிரசவத்துக்காக, நெடுங்காடு அருகே நல்லாத்தூர் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன் வந்திருந்தார். அங்கு அவருக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துர்கா லட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த துர்கா லட்சுமி, தூங்கிக் கொண்டிருந்த தனது 3 மாத குழந்தை, தனது பாட்டி வேதவல்லி(85), தந்தை பரமசிவம்(70), தாய் தமிழரசி(65), சகோதரர்கள் ஆண்டவர்(45), நடராஜன்(40) ஆகியோரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். பின்னர், தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

இதில் காயமடைந்த நடராஜன் வீட்டை விட்டு வெளியே வந்து, அருகில் வசிப்போரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று காயமடைந்த 7 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மூதாட்டி வேதவல்லியும் உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மன உளைச்சல் காரணமா?

இதுகுறித்து தகவலறிந்த நெடுங்காடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த துர்கா லட்சுமி, மன உளைச்சல் காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x