Published : 27 Jan 2023 06:29 AM
Last Updated : 27 Jan 2023 06:29 AM
சென்னை: பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் மூழ்கி கல்லூரி மாணவரான ஜூடோ வீரர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (22). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜூடோ வீரரான லோகேஷ், தினமும் பயிற்சிக்காக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்வது வழக்கம்.
கடந்த 24-ம் தேதி மாலை 6 மணி அளவில் ஜூடோ பயிற்சிக்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை செந்தில்குமார், இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.45 மணி அளவில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் லோகேஷ் சடலம் கரை ஒதுங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று லோகேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லோகேஷ், கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி மரணம் அடைந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT