

ராமநாதபுரம்: தொண்டி அருகே அக்காவை மண் வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூரைச் சேர்ந்த நாகலிங்கம் மனைவி கோவிந்தம்மாள்(60). கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கோவிந்தம்மாள் 25-ம் தேதி காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ள அவரது மகள் ராதா (36) தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இவர் அன்று மாலை தாயாருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தார். இரவு நேரமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருந்ததால் கோவிந்தம்மாள் வீட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் ராதா நேற்று காலை 7.15 மணியளவில் தாயாரை பார்க்கச் சென்றபோது, கோவிந்தம்மாள் அருகில் உள்ள வயலில் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். தகவலின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ராதா அளித்த புகாரில், தனது அண்ணன் கதிரேசனுக்கு தனது தாய்மாமாவான ஓரியூரைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகள் நிவேதாவை திருமணம் செய்து வைத்தனர். நிவேதா 2019-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதற்கு பெற்றோர்தான் காரணம் என மாமா மகாலிங்கம் கருதினார். இந்த முன்விரோதத்தில் அவர்தான் தனது தாயை கொலை செய்துள்ளார் என புகார் அளித்தார்.
இதையடுத்து மகாலிங்கம் (55), மனைவி முனியம்மாள்(50), முனியம்மாளின் சகோதரி ராணி(57), இவரது கணவர் காளிமுத்து(65) ஆகியோர் மீதுவழக்குப் பதிந்து மகாலிங்கத்தை நேற்று கைது செய்தனர்.