Published : 26 Jan 2023 04:17 AM
Last Updated : 26 Jan 2023 04:17 AM
கடலூர்: நெய்வேலி அருகே உள்ள தொப்புலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம். இவரது மகள் அஞ்சலை, மகன் அருள் முருகன். இவர்கள் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களது வீட்டில் வேலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் 5 வயது மகளை கொன்று, முதனை கிராமத்தின் அருகில் உள்ள முந்திரி தோப்பில் புதைத்தனர்.
இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் கைது செய் யப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். தற்போது நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கமலம் தரப்பினர், ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பணம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பணம் தராமல் ஏமாற்றியதால், ராஜேஸ்வரியின் உறவினர்களான களமேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப், பிரகாஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்கள் கமலம் வீட்டிற்கு சென்றனர். இது குறித்து முன்னதாகவே தெரிந்து கொண்ட கமலம் தரப்பினர் நெய்வேலி தெர்மல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சப்- இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் போலீஸார் கமலம் வீட்டின் அருகில் பதுங்கி இருந்தனர். அப்போது கமலம் வீட்டிற்குள் புகுந்த களமேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் அவனது கூட்டாளிகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது மறைந்திருந்த போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது திடீரென பிரகாஷ், சுட்டு விடுவதாக கூறி துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டி விட்டு அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கியுடன் தப்பிச் சென்றவர்களை, கடலூர் எஸ்பி எஸ்.சக்திகணேசன் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT