

கோவை: கோவை விமான நிலையத்தில் போலி ஆவணங்களை காட்டி ஊடுருவ முயன்ற வங்கதேச இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தேசியகீதத்தை பாட சொன்னபோது அவர் சிக்கினார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 6.25 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தேசிய கீதத்தை பாட அறிவுறுத்தினர். தேசிய கீதம் தெரியாமல் திணறிய அந்த இளைஞர், பாட மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் ஹூசைன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய பீளமேடு போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் மூலம் ஏற்கெனவே திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், வேலை தேடி ஷார்ஜாவுக்கு சென்றபோது போதிய ஊதியம் கிடைக்காததால் மீண்டும் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி கோவை வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை விமான நிலையத்தில் இந்திய ஆவணங்களை காட்டி ஊடுருவ முயன்ற வங்கதேச இளைஞர் கைது செய்யப்பட்டுஉள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.