திரைப்பட பாணியில் மிளகாய் பொடி தூவி ஊழியர்களை கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளை முயற்சி: திண்டுக்கல்லில் இளைஞர் கைது

கலீல் ரகுமான்
கலீல் ரகுமான்
Updated on
1 min read

திண்டுக்கல் | திரைப்படப் பாணியில் திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை 10.30 மணியளவில் ஊழியர்கள் 4 பேர் பணியை தொடங்கினர். அப்போது வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஊழியர்கள் மீது திடீரென மிளகாய் பொடியை தூவிவிட்டு, கயிற்றால் அவர்களின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகள், பணத்தைத் தேடினார்.

சுற்றிவளைத்த மக்கள்

கைகள் கட்டியிருந்த நிலையில் வங்கி ஊழியர் ஒருவர் அங்கிருந்து வெளியே ஓடி வந்து கூச்சலிட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்தார். உடனடியாக உள்ளே சென்ற பொதுமக்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்துப் பிடித்து அவரிடமிருந்த கத்தி, கட்டிங் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களைப் பறித்தனர்.

தகவலறிந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம், பொதுமக்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை ஒப்படைத்தனர்.

காரணம் என்ன?

விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல் அருகேயுள்ள பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, பட்டயப்படிப்பு முடித்த கலீல் ரகுமான் (25) என்பதும், விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் திரைப்பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கலீல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர்.

வங்கிக் கொள்ளை முயற்சி சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கி ஊழியர் மற்றும் பொதுமக்களின் முயற்சியால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் தப்பின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in