திண்டிவனத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை - பணிச்சுமை காரணமா?

உதவி ஆய்வாளர் முருகன் | கோப்புப் படம்
உதவி ஆய்வாளர் முருகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

விழுப்புரம்: திண்டிவனத்தில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் சேடன்குட்டை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (58), காவல் உதவி ஆய்வாளர். இவரது சொந்த ஊர் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமம். இவர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாயார் உயிரிழந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

இவர் 1987-ம் ஆண்டுகாவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இவருடன் பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக இருந்து வருகின்றனர். ஆனால் இவரை உயர் அதிகாரிகள் பல்வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தும், பணிகால தண்டனை வழங்கியும் ஊதிய உயர்வு வராத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த முருகன், சில மாதங்களாக சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் உள்ள அவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு கொண்டார். நேற்று அதிகாலையில் இதையறிந்த அவரது குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்து பணிச் சுமை காரணமா? குடும்ப பிரச்சினையா? என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in