Published : 24 Jan 2023 06:21 AM
Last Updated : 24 Jan 2023 06:21 AM
திருச்சி: திருச்சி தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருடு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் ஐஏஎஸ் காலனியைச் சேர்ந்தவர் நேதாஜி(65). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், தனது 3 சகோதரர்களின் குடும்பங்களுடன் இணைந்து கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார். மேலும் தனியார் பேருந்துகள், பெட்ரோல் நிலையம், கிரஷர் கம்பெனி, சாலை அமைத்தல், மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானம் தொடர்புடைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவரது சகோதரர் தேவேந்திரன் மகனுக்கு திருச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையே வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்திலுள்ள அனைவரும் அந்த விழாவுக்காக ஓட்டலுக்குச் சென்றுவிட்டனர்.
இதையறிந்த மர்ம கும்பல், நேதாஜியின் வீட்டுக்கு வந்து முன்புற இரும்புக் கதவு, அதைத்தொடர்ந்து இருந்த மரக்கதவு ஆகியவற்றில் இருந்த பூட்டுகளை உடைத்துவிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள அறைகளில் பீரோ உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
விழா முடிந்து நேற்று மாலை வீட்டுக்கு வந்து நேதாஜி குடும்பத்தினர், கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு நகைகள், பணம், பொருட்கள் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், மாவட்ட எஸ்.பி சுஜித்குமார், திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், கமலவேணி உள்ளிட்டோர் அங்குசென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தடய அறிவியல் பிரிவு இன்ஸ்பெக்டர் அச்சுதானந்தன் தலைமையிலான குழுவினர் அங்குசென்று வீட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியிருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. திருட்டு நடைபெற்ற வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நேதாஜி அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் கூறும்போது, ‘‘நேதாஜி வீட்டில் இருந்த 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருடு போனது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரிப்பதற்காக 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், போலீஸார் தினமும் 3 முறை வீட்டுக்கு வந்து பார்வையிடுவார்கள். இனியாவது பொதுமக்கள் இதை கடைப்பிடித்து போலீஸுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT