

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் அருகே ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே தோப்புப் பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன்.
இவரது ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் திண்டுக்கல்லுக்கு ஓட்டிச் சென்றார். வேனில் நாகேந்திரன்(26), விக்னேஷ்(18) ஆகியோர் இருந்தனர். திண்டுக்கல்லில் கரூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆம்னி வேனுக்கு பெட்ரோல் நிரப்பினர். அங்கிருந்து வெளியேறும் முன்பு வேனின் கீழ் பகுதியில் இருந்து தீப்பொறி பறந்து மளமளவென எரியத் தொடங்கியது.
இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பெட்ரோல் பங்கில் இருந்து சாலை வரை ஆம்னி வேனை தள்ளிக் கொண்டு சென்றனர். ஊழியர் ஒருவர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றார். அதற்குள் தீ பரவி வேன் முழுவதும் எரிந்தது. தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
தீ பரவத் தொடங்கியதும் வேனில் இருந்த 3 பேரும் வெளியேறியதால் தப்பினர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.