

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீஸார் நேற்று கூறியதாவது: வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்டது திருமங்கலம். இங்குள்ள பொதுக்கிணறு, இப்பகுதி மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று காலை கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்காக மோட்டாரை இயக்க வந்துள்ளார்.
அப்போது கிணற்றின் அருகே வசிக்கும் சண்முகம் (59), மனைவி பத்மாவதி (55) ஆகியோர் கிணற்றுக்குள் மர்மபொருளை வீசியதாகவும், கிணற்றுக்குள் இறங்கி, அந்த பொருளை எடுத்து பார்த்தபோது, அது விஷபாட்டில் என தெரியவந்ததாகவும் மகேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, தம்பதி மீது கெட்ட வார்த்தை பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுக்கப்பட்டு, திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராக சண்முகம் பணியாற்றி வருகிறார்.