

மதுரை: மதுரையில் துரிதமாகச் செயல்பட்டு ரூ. 33.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்திய நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர்கள், காவலர்களுக்கு காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுரை நகரில் கடந்த 15-ம் தேதி அரசரடி பகுதியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குத்தூர்சிங் என்பவர் நடந்து சென்றார். அப்போது ராஜா, சுந்தர மகாலிங்கம், கார்த்திக் ஆகிய மூவர் குத்தூர்சிங்கை மிரட்டி, அவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்து ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் வருசை முகமது, முத்துக்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு, ஆட்டோவை மடக்கி அதில் இருந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர். கடந்த 16-ம் தேதி கோச் சடை பகுதியில் வாகனச் சோதனையின்போது, எஸ்.எஸ். காலனி காவல் ஆயவாளர் பூமிநாதன், இரண்டு மோட்டார்
சைக்கிள்களில் வந்த பெரியண்ண குமார், குபேந் திரன் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், கடந்த 16-ம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய் வாளர் கதிர்வேல் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், மனோகர் சிங், பூபதி, கவுதம் ஆகியோர் கார்களில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து, காவல் ஆய் வாளர்கள் பூமிநாதன், கதிர்வேல் மற்றும் காவலர்களை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டினார். துணை ஆணையர்கள் சாய் பிரனீத், பிகே. அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.