

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள மாளிகை மேடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனுஷ், பிரதீப் ஆகிய இருவரும் காணும் பொங்கலான நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சத்தம் போட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் எஸ்.கே.பாளையம் தோப்பு வழியே சென்றுள்ளனர்.
அப்போது தோப்பில் மதுகுடித்து கொண்டிருந்த எஸ்.கே. பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், செந்தில் உள்ளிட்ட 10 பேர் தனுஷ், பிரதீப் இருவரையும் பார்த்து அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் தங்கள் பகுதியினருக்கு தகவல் கொடுத்து வர சொல்லி ஒருவரை ஒருவர் கல் மற்றும் தடியால் தாக்கி கொண்டனர்.
இதில் மாளிகை மேடு பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (50), பிரபு (40), வசந்தா (38) நாவத்தாள் (50) வசந்த் (30) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதே போல் எஸ்.கே. பாளையம் கிராமத்தை சேர்ந்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும்போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் எஸ்.கே. பாளையம் கிராமத்தை சேர்ந்த சசி, செந்தில்,அருண், கவுதம், பூவரசன், சுந்தரம்,செங்குட்டுவன், சிவகுமார், பிரபா கரன், ரமேஷ், கிருஷ்ண மூர்த்தி, விஜயகுமார், குமார், மதன் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், எஸ்.கே. பாளையம் கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ், மணிபாலன், ராம்குமார், ஜான், செல்வமணி, சச்சின், தனுஷ். மதன், சூர்யா உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.