

திருச்சி: திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு சாலையைச் சேர்ந்தவர் கந்தசாமி(59). அகில இந்திய வானொலியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றவர்.
அவ்வப்போது, ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் இவர், வெள்ளைக் கோபுரம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் படுத்துறங்கி, பொதுமக்களிடம் யாசகம் பெற்று உணவருந்தி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் யாசகம் பெற்று வசித்து வந்த ஈரோடு காசிப்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆஞ்சநேயர் கோயில் அருகே சாலையோரத்தில் படுப்பதற்கு இடம்பிடித்தபோது கந்தசாமி, முருகேசன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன் அருகில் கிடந்த கல்லால் கந்தசாமியின் தலை, முகத்தில் தாக்கியதில் படுகாயமடைந்த கந்தசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சாதி பாகுபாட்டைக் காரணம்காட்டி கந்தசாமியை தனக்கருகில் படுக்கவிடாமல் முருகேசன் தடுத்து தகராறு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் கந்தசாமியின் மகள் துர்காதேவி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த முருகேசனை நேற்று மேலூர் பகுதியில் கைது செய்தனர்.