

கோவை: தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எரித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக கூலி தொழிலாளி உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்தவர் சுரேஷ்(30). கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு சென்றுவந்தார். கடந்த 14-ம் தேதி இரவு சுரேஷ் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் சுரேஷ் மீது தீ வைத்து விட்டு தப்பி சென்றார்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். சிங்காநல்லூர் காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் ஊத்தங்கரை நொச்சிபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணி (53) என்பது தெரியவந்தது.
சுப்பிரமணியும், சுரேஷும் நண்பர்கள். சம்பவத்தன்று பணத் தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரேஷ் தூங்கியபோது, சுப்பிரமணி பெட்ரோல் பங்க்கில் இருந்து எரிபொருளை வாங்கிச்சென்று சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் சுப்பிரமணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாட்டிலில் டீசல் விற்பனை செய்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்த பாஸ்கரன்(62), சிங்காநல்லூரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(59) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.