ஸ்ரீபெரும்புதூர் | பாலியல் வன்கொடுமை வழக்கு - இருவர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீபெரும்புதூர் | பாலியல் வன்கொடுமை வழக்கு - இருவர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டுவந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி இரவு 12 மணியளவில் எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையில் நடந்து சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் அப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் (31) மற்றும் பிரகாஷ் (31) என்ற இருவர் தான் குற்றவாளிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு தனிப்படை போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு 21 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் அருகே சுமார் தொந்தரவு செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இருவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் இருவரும் களவு கொள்ளை, வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் காஞ்சிபுரம் தவிர அரக்கோணம், திருவள்ளுர், செய்யாறு மற்றும் சில இடங்களிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

நாகராஜ் என்பவர்மீது திருட்டு, வழிப்பறி மற்றும் கன்னக்களவு வழக்குகள் உள்ளது. மேலும் இவர்கள் தங்களை காவலர்கள் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி வாக்கிடாக்கி, லத்தி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நெம்பர் பிளேட் கட்டர், மிளகாய்பொடி, சாவி, ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு, கையுறை மற்றும் முகமுடி ஆகியவை கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் தான் தப்பியோட முயன்றபோது இருவரையும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதன்படி, 20 நாட்களாக தலைமறைவாக இருந்த இருவரையும் இன்று கைது செய்யும்போது இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவருக்கும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூருக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in