

திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில் 454 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 9-ம் தேதியிலிருந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி, கடந்த 5 நாட்களில் 454 ரவுடிகளின் வீடுகளில் சோதனைசெய்யப்பட்டு 29 வகையான கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க திருச்சி, புதுக்கோட்டையில் தலா 7, கரூரில் 11, பெரம்பலூரில் 4, அரியலூரில் 33, தஞ்சாவூரில் 14, திருவாரூரில் 34, நாகப்பட்டினத்தில் 27, மயிலாடுதுறையில் 24 என 161 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நன்னடத்தை பிணை பெற்ற 2 பேர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.