

செங்குன்றம்: செங்குன்றம் அருகே புள்ளிலைன், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்சாகர். இவர், தன் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்கக் கோரி பேரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு செங்குன்றம்-2 அலுவலக உதவி பொறியாளரான, அம்பத்தூர்- மேனாம்பேடுவைச் சேர்ந்த கணேசன், ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரேம்சாகர்திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று பாலவாயிலில் உள்ள மின்வாரிய அலுவலகம் சென்று அங்கிருந்த கணேசனிடம் லஞ்சபணத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை திருவள்ளூர் டிஎஸ்பி கலைச்செல்வம் தலைமையிலான போலீஸார் கணேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது, கணேசனிடம் இருந்து, கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர்.