சிவகங்கையில் டவுசர் கொள்ளையர்கள் வீடு புகுந்து நகை பறிப்பு: தேவகோட்டை சம்பவத்தில் பெண் உயிரிழப்பு
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கையா. சாலைக்கிராமம் கண்மாய்க்கரை சாலையில் மனைவி காளியம்மாளுடன்(70) வசித்து வருகிறார். சங்கையாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் தேவகோட்டை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாத நிலையில், காளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அன்றைய தினம் நள்ளிரவில் டவுசர் அணிந்த 2 பேர், ஹெல்மெட் அணிந்து காளியம்மாளின் வீட்டுக்குள் புகுந்தனர். அவரை அடித்து, அவர் கழுத்தில் இருந்த தங்கத் தாலி மற்றும் செயின் உட்பட 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
46 பவுன் கொள்ளை சம்பவம்.. தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் குமார்(40). மலேசியாவில் வேலை செய்கிறார். இவரது தாயார் கனகாம்பாள் (65), மனைவி வேலுமதி(35), மகன் மூவரசு(12) ஆகிய மூவரும் கண்ணங்கோட்டை வீட்டில் வசிக்கின்றனர். ஜன.10-ம் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி பீரோவைத் திறக்க முயன்றபோது கனகாம்பாள், வேலுமதி ஆகியோர் தடுத்தனர். அப்போது 3 பேரையும் அக்கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, 46 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
இதில், வேலுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனகாம்பாள், மூவரசு ஆகியோர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர். இதில் கனகாம்பாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
