

கோவை: திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தேனய்யா (50). இவர் கோவை மாவட்டம் வால்பாறையில் மனைவி, மகளுடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் குடும்பத்தை பிரிந்த தேனய்யா, வேறொரு திருமணம் செய்துகொண்டு திருநெல்வேலிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அவரது 17 வயது மகள், தந்தையை பார்க்க 2011-ம் ஆண்டு திருநெல்வேலி சென்றுள்ளார். அங்கிருந்து அவரை மீண்டும் வால்பாறைக்கு கொண்டுவந்து விடுவதாக கூறி அழைத்து வந்த தேனய்யா, பல்வேறு இடங்களில் மகளை அடைத்துவைத்து சித்ரவதை செய்து, மயக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், திருநெல்வேலிக்கே மகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து தப்பித்த மகள், திருநெல்வேலியில் உள்ள காவல்நிலையத்தில் 2012-ம் ஆண்டு புகார் அளித்தார். அங்கு வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வால்பாறையில் சம்பவம் நடைபெற்றதால், பின்னர் இந்த வழக்கு வால்பாறைக்கு மாற்றப்பட்டு, 2018-ம் ஆண்டு முதல் கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, 2020-ல் பிணையில் சிறையிலிருந்து வெளியேறி, தலைமறைவாக இருந்த தேனய்யாவை, வால்பாறை காவல்ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீஸார் 6 மாதங்களுக்கு முன் மீண்டும் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி நேற்று தீர்ப்பளித்தார்.
இதில், தேனய்யாவுக்கு ஆயுள்சிறை தண்டனை, மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஜிஷா ஆஜரானார்.