

திண்டுக்கல்: சிறுமி மாயமானது குறித்து புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை எனக் கூறி, செம்பட்டி காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கெண்டிச் சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பரமசிவம். இவரது 14 வயது மகள் சின்னாளபட்டியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை சிறுமி காணாமல் போய்விட்டார். இதையடுத்து செம்பட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணையிலும் சிறுமி குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று காலை செம்பட்டி காவல் நிலையத்தை சிறுமியின் பெற்றோர், உறவினர் கள் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீ ஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கிராம மக்கள் காவல் நிலையத்துக்குள் நுழையாமல் இருக்க போலீஸார் கதவை மூடினர். ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன், செம்பட்டி இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சிறுமியை தொடர்ந்து தேடி வருவதாகவும், விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.