புதுச்சேரி | யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்து வீசிய 4 பள்ளி மாணவர்கள்: சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பு

புதுச்சேரி | யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்து வீசிய 4 பள்ளி மாணவர்கள்: சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய 4 பள்ளி மாணவர்கள், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

புதுவை சாந்திநகர் விரிவு 2-வதுகுறுக்குத் தெருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதில்,பள்ளி மாணவர்களை அழைத்துசெல்லும் ஒரு வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது.

உருளையன்பேட்டை போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறிக் கிடந்தன. நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லை. தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். அதில், 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்றதும், நடந்து செல்வதும் பதிவாகி இருந்தது.

இதைக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், இறுதியில் கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களை பிடித்தனர். அவர்கள் 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.

வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என அவர்கள் யூ டியூப்பில் பார்த்துள்ளனர். அதில், சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. அதைப்பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்துகளை கொண்டு 2 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர்.

ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றொன்றை வீசியபோது சத்தத்துடன் வெடித்துள்ளது. இதையடுத்து 4 பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். 2 சிறுவர்களை தேடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in