

சென்னை: சென்னை புளியந்தோப்பு பவானியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோ(31). கடந்த 6-ம் தேதி இரவு இவரது உறவினரான ஆகாஷ், அஜித் ஆகியோரை புளியந்தோப்பு தாஸ்நகர் 7-வது தெருவைச் சேர்ந்த சசிக்குமார் (26) மற்றும் அவரது கூட்டாளிகள் வழிமறித்துத் தாக்கிஉள்ளனர்.
இதை அறிந்த மனோ, தட்டிக்கேட்க புளியந்தோப்பு சென்றுள்ளார். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது. இதில் ஆத்திரம் அடைந்தசசிக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் குத்தி மனோவை கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான கும்பலை பிடிக்கத் தனிப்படை அமைத்தனர்.
இந்நிலையில், மனோ கொலைதொடர்பாக புளியந்தோப்பு சசிக்குமார், அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (27), அப்பு என்ற அஜய்குமார் (23), கன்னிகாபுரம் அருண் (22), புளியந்தோப்பு வெற்றி என்ற வெற்றிவேல் (22), கொருக்குப்பேட்டை பில்லான்ராஜ் (69), ரேவதி (33), தேவி (32) ஆகிய 8 பேரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
கொலை செய்யப்பட்ட மனோகடந்த 2021-ம் ஆண்டு சசிக்குமாரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால்மனோ, சசிக்குமார் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பழைய முன் விரோதத்தில் கொலை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.