

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (65). உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருசாமியை அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். மருத்துவமனையில் உள்ள 4-வது வார்டில் குருசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி குருசாமி இறந்து விட்டார். சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் குருசாமி இறந்துவிட்டதாகக் கூறி அவரது மகள் லிங்கம்மாள் (33), மருமகன் ரவிக்குமார் (43), உறவினர் மணிகண்டன் (31) ஆகியோர் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் ரித்தீஸ் ஆர்த்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரித்தீஸ் ஆர்த்தரை தாக்கியுள்ளனர்.
பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணியில் இருந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டீன் ரவிச்சந்திரன், துணை காவல் ஆணையாளர் னிவாசன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக லிங்கம்மாள், ரவிக்குமார், மணிகண்டன் ஆகி யோர் மீது பாளையங் கோட்டை ஹைகிரவுண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ரவிக்குமார் கைது செய்யப்பட்டார்.