

பெரம்பலூர்: கடலூரில் இருந்து திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த கார், பாடாலூர் அருகே டிப்பர் லாரிமீது மோதியதில், காரில் பயணித்த 5 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கார், லாரி ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் சேர்வரா யன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், விடு முறையில் ஊருக்கு வந்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூர் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி விமானநிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
ரஞ்சித் குமாருடன் சிங்கப்பூரில் ஒன்றாக பணிபுரிந்து வந்த அவரது நண்பர் செல்வாவின் மனைவியான கள்ளக்குறிச்சி மாவட்டம் ஓகையூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி(23), அவரது மகள் சாருநேத்ரா(5) மற்றும் உறவினர்கள் உட்பட 5 பேரும், அந்த காரில் சென்றனர். கடலூர் மாவட்டம் சேர்வராயன் குப்பம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(37) காரை ஓட்டினார்.
திருச்சி- சென்னை நெடுஞ் சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி சாலை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அங்குள்ள சாலை பிரிவில் திரும்புவதற்காக வலதுபக்கம் திரும்பிய டிப்பர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில், ரஞ்சித்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் முத்துசாமி, மகேஸ்வரி, சிறுமி சாருநேத்ரா, உறவினர்கள் ஜெயவேல், நாகமுத்து ஆகிய 5 பேரும் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு,சிறுமி சாருநேத்ரா உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரான பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மகாபிரபு (47) பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.