

திருச்சி: தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் 1.5 லட்சம் பயணிகள் திருச்சிக்கு வந்து செல்வதாக தெற்குரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, வடமாநிலங்களை இணைக்கக்கூடிய வகையில் அகமதாபாத், ஹவுரா, திருப்பதி, கங்காநகர், ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சிக்கு நேரடியாகவும், திருச்சி வழியாகவும் வாராந்திர மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, திருச்சிமற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி வேலை பார்க்கவரும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கரோனா ஊரடங்கு காலத்துக்குப் பிறகு கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி ஜங்ஷன்ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் தனியாக மற்றும் குழந்தைத் தொழிலாளர்களாக வரும் சிறுவர்கள் மீட்கப்படுவது அதிகரித்து வருவது குழந்தைகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள சைல்டு லைன் நிர்வாகி ஒருவர், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி ஜங்ஷன் மற்றும் அதைச் சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் இருந்து 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 2,909 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
2022-ம் ஆண்டில் மட்டும் 406 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 10 சதவீதம் பெண் குழந்தைகள். இவ்வாறு மீட்கப்படுபவர்களில் 40 சதவீதத்தினர் வடமாநிலத்தில் இருந்து இடைத்தரகர்களால் குழந்தைத் தொழிலாளர்களாக அழைத்து வரப்படுபவர்களாக உள்ளனர். மீட்கப்படும் சிறுவர்கள், காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் மோகன் கூறியது: திருச்சிக்கு ரயிலில் தனியாக வந்து மீட்கப்படும் சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
ரயில் நிலையங்களில் மீட்கப்படும் தமிழக சிறுவர்கள் பெரும்பாலும் பெற்றோர் கண்டிப்பு, படிப்பதில் ஆர்வமின்மை, பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே வெளியேறி வருகின்றனர். ஆனால், வடமாநில சிறுவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். இதன் காரணமாக, வடமாநிலத்தில் இருந்து சிறுவர்களை அழைத்து வருபவர்களிடம், உரியஅரசு ஆவணங்கள் உள்ளனவா என கேட்கப்படுகிறது.
இல்லையெனில், சம்பந்தப்பட்ட மாநில குழந்தைகள் நலக் குழுவினரை தொடர்புகொண்டு விசாரித்த பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து, அவர்களின் செல்போனில் உள்ள ஜிபிஆர்எஸ் மூலம்கண்காணிப்படுகிறார்கள். சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சிறுவர்கள் மீட்கப்பட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன், அழைத்து வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதுவரை மீட்கப்பட்ட சிறுவர்களில் 7 பேரை தவிர மற்றவர்கள், பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டனர். இதுபோன்ற கட்டுப்பாடுகள் அதிகரிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக ரயில்களில் இதுபோன்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.