

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே மாணவியை பாலியியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் வசிப்பவர் பரணி(59). இவர் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் மற்றும் கிராம இளைஞர்கள் நேற்று முன் தினம் வலியுறுத்தினர்.
இதுப்பற்றி தகவலறிந்த வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான காவல் துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து திருவண்ணா மலை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் தீபிகா தலைமையில் மாணவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படை யில், வந்தவாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பரணியை நேற்று கைது செய்தனர்.