

பூந்தமல்லி: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ரூ.28.51 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் இருவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பூந்தமல்லி ஜே.எம்.1 நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சென்னை- வளசரவாக்கம் அலுவலகத்தில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மின் கணக்கீட்டுஆய்வாளராக கணபதி, மின் கணக்கீட்டாளராக சிவபிரகாசம், வருவாய் மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது ஆகிய 3 பேர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் கடந்த 2003-ம் ஆண்டு நுகர்வோரிடம் இருந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பெறப்பட்ட 28 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி ஆவண தடுப்பு பிரிவில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், சிவபிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். பிறகு, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே சிவபிரகாசம் உயிரிழந்துவிட்டார். ஆகவே, அவர் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
இந்நிலையில், முடிவுக்கு வந்த பணம் கையாடல் வழக்கு விசாரணையில், கணபதி, சாகுல்ஹமீது ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
ரூ.12 ஆயிரம் அபராதம்
இதையடுத்து பூந்தமல்லி ஜே.எம்-1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டாலின் நேற்று முன் தினம் தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், கணபதிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், சாகுல் ஹமீதுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தார் மாஜிஸ்திரேட் ஸ்டாலின்.
மேலும், கணபதி, சாகுல்ஹமீது ஆகிய இருவரும் சேர்ந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.