

சேலம்: மேட்டூர் அருகே மகனின் முதல் மனைவியைக் கொலை செய்த வழக்கில், மாமியார் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜா (28). இவர் பெங்களூருவில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தபோது, பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமி மற்றும் புஷ்பா என்ற இரு பெண்களை திருமணம் செய்து குடும்பம்நடத்தி வந்தார்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டு மே மாதம், பெங்களூருவில் இருந்த சார்லஸ் ராஜா கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மேட்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, சார்லஸ் ராஜாவை, அவரது முதல் மனைவி லட்சுமியின் உறவினர்கள் தான் கொலை செய்தனர் என்று சார்லஸ் ராஜாவின் தாயாரிடம், அவரது இரண்டாவது மனைவி புஷ்பா கூறியிருக்கிறார்.
இந்நிலையில், சார்லஸ் ராஜாவின் தாயார் மேரிகுளோரி (58), அவரது மருமகன் ஜான் போஸ்கோ (48), சார்லஸ் ராஜாவின் 2-வது மனைவி புஷ்பா ஆகியோர் ஒன்று சேர்ந்து,மேட்டூரில் இருந்த லட்சுமியை 2009-ம் ஆண்டு ஜூனில் மேட்டூர் காவிரி ஆற்றுக்கு அழைத்துச் சென்று, அவரை தாக்கி, கை, கால்களை கட்டி ஆற்றில்தள்ளி கொலை செய்ததாக தெரியவந்தது. இது தொடர்பாக, மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய புஷ்பா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, மற்ற இருவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மேரி குளோரி, ஜான் போஸ்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.