Published : 05 Jan 2023 06:54 AM
Last Updated : 05 Jan 2023 06:54 AM

வேளச்சேரியில் மாயமான 16 வயது சிறுவன் டெல்லியில் மீட்பு

சென்னை: வேளச்சேரியில் மாயமான 16 வயது சிறுவனை 36 மணி நேரத்தில் சென்னை போலீஸார் டெல்லி சென்று மீட்டுள்ளனர்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன் ஒருவர் கடந்த 2-ம் தேதி பள்ளிக்குச் சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில், வேளச்சேரி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் மாணவன் படித்த பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், சிறுவன் மடிப்பாக்கம், ராம் நகர் பேருந்து நிலையத்துக்கு 2-ம் தேதி மாலை 4 மணியளவில் சென்று பேருந்தில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சிறுவன் டெல்லிக்கு செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே தனிப்படை போலீஸார் டெல்லி ஆர்.பி.எப் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உஷார்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையம் விரைந்து ரயில் வரும் முன்பே அங்கு சென்று காத்திருந்து நேற்று காலை ரயில் நிலையத்தில் இறங்கிய சிறுவனை மீட்டு சென்னைக்கு அழைத்து வருகின்றனர். புகார் கொடுத்த 36 மணி நேரத்துக்குள், காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து மீட்ட சென்னை தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் மற்றும் சிறுவனின் பெற்றோர் பாராட்டினர். பெற்றோர், படிக்க கட்டாயப்படுத்தியதால் மாணவன் வீட்டை விட்டு வெளியேறியது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x