Published : 05 Jan 2023 04:17 AM
Last Updated : 05 Jan 2023 04:17 AM

நெல்லை மருத்துவமனையில் குழந்தை மரணம்: பெற்றோரை தேடும் போலீஸ்

தென்காசி: சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார். இவர், தனது மனைவி ஹேமலதா, இரண்டரை வயது பெண் குழந்தை ஹாசினி ஆகியோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், ஹேமலதா ஜவுளிக் கடையிலும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் குழந்தை ஹாசினி கடந்த 31-ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

குழந்தை சுய நினைவின்றி காணப்பட்டதால் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி குழந்தை ஹாசினி பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சக்தி வேல் மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டதும், சம்பவத்தன்று குழந்தையுடன் வீட்டில் இருந்த சக்தி வேல், குழந்தையை சுவரில் தூக்கி வீசியதும், இதில் மயக்கமடைந்த குழந்தையை கீழே விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவமனையில் இருந்து பெற்றோர் மாயமாகியுள்ளனர். தலைமறைவான பெற்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x