

சென்னை: புத்தாண்டு அன்று மது குடித்ததைக் கண்டித்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் நந்தகுமார் (32). இவரதுமனைவி சபிதா (31). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்; 2 குழந்தைகள் உள்ளனர்.
``கடந்த 1-ம் தேதி இரவு நான் மதுகுடித்ததை சபிதா கண்டித்தார். இதனால் எங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சபிதா தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்ய முயன்று மயங்கி விழுந்தார். அவரை, மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தேன். அங்கு சபிதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர்'' என உறவினர்களிடம் கூறி நந்தகுமார் கதறி அழுதுள்ளார்.
சந்தேகம் அடைந்த சபிதாவின் தந்தை,இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சபிதா உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சபிதா கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நந்தகுமாரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். எனவே நந்தகுமார் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.