

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் மாவட்ட சமூகநல அலுவலர் இந்திரா தலைமையிலான அலுவலர்கள் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், குழந்தை திருமணம் குறித்து 181 மற்றும் 1098 ஆகிய கட்டணமில்லா எண்களுக்கு வரும் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 28 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, பெண் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெற்றோர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். சட்டத்தை மீறுபவர்கள் மீதும், அவர்களை திருமணம் செய்யும் வாலிபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.