

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சொத்து தகராறில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினரான திமுக ஒன்றிய செயலாளரின் மகனை போலீஸார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்தவர் திராவிடபாலு.
திமுக பிரமுகரான இவர் தற்போது உயிருடன் இல்லை. இவரது தம்பி சத்தியவேலு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர். இவருக்கும், திராவிடபாலுவின் குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் சொத்துப் பிரச்சினை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சத்தியவேலுவின் மகன் விஷால், திராவிடபாலுவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி செல்வி, மகன் முருகன், முருகனின் மனைவி ரம்யா, மகன் கருணாநிதி ஆகியோரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த ரம்யா உள்ளிட்ட 4 பேரும் மஞ்சங்காரணையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், ரம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று விஷாலை கைது செய்தனர்.