

தூத்துக்குடி: தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பனிமய கிளாட்வின் மனோஜ்(38). இவர் தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்துள்ளது.
அதில், “மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள 2 கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து மருந்துகள் வாங்கி ஏற்றுமதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பனிமய கிளாட்வின் மனோஜ் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரிடம் பேசிய வெவ்வேறு நபர்கள் மருந்துகளை அனுப்பி வைப்பதாக கூறி, ஆன்லைன் மூலம் ரூ.36,98,800 பெற்றுள்ளனர். ஆனால், மருந்துகளை அனுப்பி வைக்கவில்லை.
இது குறித்து பனிமய கிளாட்வின் மனோஜ் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். விசாரணையில், மகாராஷ்டிரா நவி மும்பையில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த நபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் நவி மும்பைக்கு சென்று நைஜீரியாவை சேர்ந்த இஸி பிடலிஸ் நூபுசி (42) என்பவரை கைது செய்தனர்