

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் கொலை வழக்குகள் 35 சதவீதம் குறைந்துள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-ல் 51 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே 2022-ல் 33 கொலை வழக்குகள் பதிவாகின. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவாகும். சொத்து வழக்குகளைப் பொருத்தவரை 2021-ஐ விட, 2022-ம் ஆண்டு சொத்து வழக்குகளின் கண்டுபிடிப்பு 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொடுங்குற்ற வழக்குகள் 2021-ம் ஆண்டு 69 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 13 வழக்குகள் குறைவாகும். கொலை, கொலை முயற்சி, வன்முறை, காயம் சம்பந்தப் பட்ட வழக்கு களை பொருத் தவரை 2021-ல் 907 வழக்கு களும், 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறை வாகும்.
கடந்த ஆண்டு 112 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-ல் 1199 வாகன விபத்துகளில் 360 பேர் உயிரிழந் துள்ளனர். 2021-ம் ஆண்டைவிட 10 சதவீதம் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன. மேலும், விதிமீறிலில் ஈடுபட்ட 3,96,782 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொபைல் போன் காணாமல் போனதாகப் பெறப்பட்ட 853 புகார்களில் தொடர்புடைய 552 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.
குண்டர் சட்டம்: 2022-ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 7 பேர் , கஞ்சா விற்ற 6 பேர், பாலினக் குற்ற செயல்களில் ஈடுபட்ட 6 பேர், சொத்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர், தேச விரோத குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பேர் என மொத்தம் 24 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா, புகையிலை: சட்ட விரோதமாக கஞ்சா விற்ற 192 பேர் மீது 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.29,27,080 மதிப்புள்ள 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 105 பேரின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஒருவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்த 602 பேர் மீது 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.34,08,856 மதிப்புள்ள 3,698 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 8300031100 என்ற மொபைல் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பி.தங்கதுரை தெரிவித்தார்.