

மதுரை: மதுரை நகரில் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதால் அமைதியான சூழல் நிலவுவதாக காவல் ஆணையர் டி.செந்தில்குமார் தெரிவித்தார்
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகர் காவல்துறை பொது மக்களோடு நட்புடன் இருந்து, அதிநவீன தொழில் நுட்பங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் சமூக விரோதிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022-ல் மாநகர் காவல் நிலையங்களில் 1,685 பதிவேடு ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டனர். இதில் குற்றச்செயலில் ஈடுபட்ட 1,306 பேரில் கஞ்சா விற்ற 54 பேர், ஆயுதங்கள் வைத்திருந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
90 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் 2022-ல் நடந்த 32 கொலைகளில், பழிவாங்கும் கொலையோ, இனவாதக் கொலை களோ நடக்கவில்லை. 2021-ல் 35 கொலைகள் பதிவாகின. முந்தைய ஆண்டை விட கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன.
திருடுபோன 100 இரு சக்கர வாகனங்கள், 821 மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. போதைப் பொருள் விற்றதாக 479 பேர் மீது 325 வழக்குகள் பதிவு செய்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
70 கஞ்சா விற்ற நபர்களின் 121 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1 கோடியே 11 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மாநகரில் 3035 முக்கிய சந்திப்புகள், பொது இடங்களில் 13,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.