Published : 01 Jan 2023 12:38 PM
Last Updated : 01 Jan 2023 12:38 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.2 கோடியே 24 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள திருடுபோன சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என எஸ்பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2022-ம் ஆண்டு 21 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இவ்வழக்குகள் 100 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, 38 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 101 வாகனங்கள் மற்றும் 228 பவுன் நகைகள் உட்பட ரூ.2 கோடியே 24 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
76 சதவீதம் மீட்பு: இதன்படி, திருடுபோன சொத்துகளில் 76 சதவீதம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5,142 பேர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், லாட்டரி சீட்டு வழக்குகளில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிக் கணக்குகள் முடக்கம்: தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் 244 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு, 396 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.23 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3,008 போதை மாத்திரைகள் மற்றும் 196 போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா குற்றவாளிகள் 79 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் முந்தைய ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றதாக 419 வழக்குகள் பதியப்பட்டு, 465 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12,107 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT