Published : 29 Dec 2022 04:27 AM
Last Updated : 29 Dec 2022 04:27 AM

போலி ஆவணம் தயாரித்து பெரும்பாக்கம், வேப்பம்பட்டில் நில மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

தாம்பரம் / திருவள்ளூர்: போலி ஆவணம் தயாரித்து பெரும்பாக்கம், வேப்பம்பட்டு பகுதியில் நில மோசடியில் ஈடுபட்டாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். சேலையூர், பாலாஜி நகரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். பெரும்பாக்கத்தில் உள்ள 22 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக காமராஜ் என்பவரை நாராயணன் அணுகினார். நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு விலைபேசி முன்பணமாக ரூ.2.60 லட்சம் நாராயணன் கொடுத்தார். மீதி பணத்தை, குறித்த தேதிக்குள் தரவில்லை. பல முறை மீதி பணத்தைக் கேட்டும் தரவில்லை. அதனால், வாங்கிய முன்பணத்தை காமராஜ் திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதற்கிடையில், போலி ஆவணம் மூலம் 12 சென்ட் நிலத்தை நாராயணன் அபகரித்துள்ளது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து, தாம்பரம் காவல் ஆணையரக நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் காமராஜ் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமம், சம்பத் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி உஷா, 2021-ம் ஆண்டு திருவள்ளூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அதில், “நான் வேப்பம்பட்டு கிராமம் சம்பத் நகரில் 1,240 சதுர அடி கொண்ட நிலத்தை 2004-ம் ஆண்டு கிரயம் பெற்று அனுபவித்து வருகிறேன். எனக்கு சொந்தமான நிலத்தை ஆவடி, கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த எம்.கே. சீனிவாசன், வெங்கடேசன் ஆகிய இருவரும் போலியான ஆவணம் தயார் செய்து வேப்பம்பட்டு, டன்லப் நகரில் வசிக்கும் மோகனம்பாள் மற்றும் கணேசன் ஆகியோருக்கு கிரயம் செய்து கொடுத்து சுமார் ரூ.15 லட்சம் நிலமோசடி செய்துள்ளனர்“ என தெரிவித்திருந்தார்.

இப்புகாரின் மீது நிலமோசடி பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த மோசடியில் ஈடுபட்ட எம்.கே. சீனிவாசன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x