Published : 26 Dec 2022 04:10 AM
Last Updated : 26 Dec 2022 04:10 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி-திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியபனமூட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி திம்மராயன் (55). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகள் சவுந்தர்யாவுக்கு (23) திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வந்தார். திம்மராயன், பெரியபனமூட்லு பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை சாலையை கடந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து சவுந்தர்யா, தனது கணவர் முல்லையரசு மற்றும் ஒன்றரை வயது மகன் புகழ்நிதி ஆகியோருடன் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
அங்கிருந்து 3 பேரும் ஆட்டோவில் பெரியபனமூட்லு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை ஜெகதேவியைச் சேர்ந்த ஓட்டுநர் சுப்பிரமணி ஓட்டினார். கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து, ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், சவுந்தர்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புகழ்நிதிக்கு காலில் காயம் ஏற்பட்டது. முல்லையரசு மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தது பெரியபனமூட்லு கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT