Published : 26 Dec 2022 04:27 AM
Last Updated : 26 Dec 2022 04:27 AM
திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால் 92 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 172 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.18 லட்சம் மதிப்பில் 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தல் தொடர்பாக 37 இருசக்கர வாகனங்கள், 4 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் 108 வங்கி கணக்குகள் மூலம் ரூ.5.48 லட்சம் முடக்கப்பட்டது.
புகையிலைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 350 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.33.51 லட்சம் மதிப்புள்ள 2,799 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 16 இருசக்கர வாகனங்கள், 7 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் 16 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் உட்பட 216 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 251 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
70 சதவீத திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 72 சதவீத திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் இந்த ஆண்டு 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9.65 கோடி மதிப்பில் மோசடி செய்யப்பட்ட 30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 125 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 206 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7.71 லட்சம் மதிப்பிலான 77 கிலோ கஞ்சா, 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர்கள், அவர்களது குடும்பத்தினர் 62 பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.1.27 லட்சம் முடக்கப்பட்டது.
புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 589 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.43.99 லட்சம் மதிப்புள்ள 7,358 கிலோ புகையிலைப் பொருட்கள், 21 இருசக்கர வாகனங்கள், 3 மூன்றுசக்கர வாகனங்கள், 6 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 16 பேர் உட்பட 97 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 541 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 298 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT