

மேல்மருவத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த இரு நபர்களை பிடித்து அவர்களது உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அவர்களது பையை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் ஜெயின் மற்றும் அபிலேஷ் என்பதும் நகைப்பட்டறை வைத்துள்ளதும் பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட சுமார் 2,760-கிராம் எடையுள்ள 345 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களை செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து நகைகளை மாநில வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீஸார் மற்றும் வணிகவரித் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.