Published : 25 Dec 2022 04:15 AM
Last Updated : 25 Dec 2022 04:15 AM
சென்னை: சோழர் கால கோயிலில் திருடப்பட்ட 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலையை, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்மீட்டு, 2 பேரைக் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஞ்சநேயர் சிலை ஒன்று திருடப்பட்டதாக அப்பகுதி காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு 2020-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அதில் பதிவாகியிருந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் காட்சிகள் அடிப்படையில், அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 22-ம் தேதி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்குரிய நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த நீலகண்டன் என்பதும், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் சிலை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், நீலகண்டன் தனது கூட்டாளியான மணிகண்டனுடன் சேர்ந்து சிலைகளைத் திருடி, வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நீலகண்டனின் வீட்டைச் சோதனை செய்த போலீஸார், அவரது வீட்டில் மறைந்து வைத்திருந்த பழமையான ஆஞ்சநேயர் சிலையை மீட்டனர். இதையடுத்து டிச.23-ம் தேதி வேலூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சிலை சோழர் காலத்தில்கட்டப்பட்ட, 1000 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோயிலில், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்ட 300 ஆண்டு பழமையான சிலை என போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT