

புதுக்கோட்டை / தஞ்சாவூர்: சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் களமாவூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர்கள் மகாராஜா என்ற டி.கோவிந்தராஜ்(24), எம்.பழனிசாமி(57). இருவரும் கடந்த 2020-ல் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கடந்த ஆண்டில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட மகாராஜா, பழனிசாமி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், மகாராஜாவுக்கு ரூ.2 லட்சம், பழனிசாமிக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2.5 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இளைஞருக்கு ஆயுள் சிறை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜனா என்ற வி.ஜானகிராமன்(25). இவரும், ஒரு பெண்ணும் காதலித்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதன்பிறகு, அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டியதுடன், திருமணம் செய்துகொள்ளவும் ஜானகிராமன் மறுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார், ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஜானகிராமனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2.80 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
ஓட்டுநருக்கு ஆயுள் சிறை: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரை அடுத்த மேலகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெயராஜ்(48). இவர், 2017-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெயராஜூக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2.11 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.