

வேலூர்: ராணுவத்தில் சேர்த்துவிடுவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.22 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் உட்பட 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மூர்த்தி (51). இவரும், அணைக்கட்டு அருகேயுள்ள மருதவல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் பாபு என்பவரும் சேர்ந்து ராணுவத்தில் சேர்த்து விடுவதாக கூறி இளைஞர்கள் பலரிடம் பணம் பெற்று வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (61) என்பவரின் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் தங்கள் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பணம் வசூலித்து மூர்த்தி, பாபு ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், அவர்கள் கூறியபடி யாருக்கும் வேலை கிடைக்க வில்லை. இதனிடையில், 3 பேரும் சேர்ந்து போலி பணி நியமன ஆணைகளை கடந்த 2020-ம் ஆண்டு வழங்கியுள்ளனர். அது போலி என்று தெரியவந்ததால் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். இதற்கிடையில், குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட 6 இளைஞர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா விசாரணை நடத்தி வந்தார். அதில், மூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டோரிடம் ராணுவத்தில் சேர்த்துவிடுவதாகக் கூறி ரூ.1.22 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மூர்த்தி மற்றும் சம்பத்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடி வருகின்றனர்.