

புதுச்சேரி: புதுச்சேரி வாத்து பண்ணையில் 5 சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை என 9 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மாமனார், 2 மகன்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த கீழ் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன், கோர்க்காடு ஏரிக்கரையில், தான் நடந்தி வந்த வாத்து பண்ணையில் வேலை செய்வதற்காக, சிறுமிகள் உள்ளிட்ட பலரை கொத்தடிமைகளாக வைத்திருந்தார்.
இந்நிலையில், 2020-ல் வாத்து பண்ணையில், கொத்தடிமைகளாக சிறுமிகளை வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி குழந்தைகள் நல காப்பக நிர்வாகிகள், மங்கலம் காவல் நிலைய போலீஸாரின் உதவியுடன் சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தனர்.
சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.3 ஆயிரத்தை பெற்றோரிடம் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க அழைத்து வந்ததாகவும், பண்ணையில் அடைத்து வைத்து தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த சிறுமிகள் தெரிவித்தனர். பலர் போதை பொருட்களை கொடுத்து, தொடர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது. இதையடுத்து மங்கலம் காவல்நிலையத்தில் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் புகார் அளித்தனர்.
தந்தை, தாய், 2 மகன்கள்: அதன் அடிப்படையில், வாத்து பண்ணை நடத்திய புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் கன்னியப்பன் (60), இவரது மனைவி சுபா (45). இவர்களது மகன்கள் ராஜ்குமார் (27), சரத்குமார் (25), கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாம்பலப்பட்டு பசுபதி (21), பெரிய முதலியார்சாவடி சிவா(21), வானூர் மூர்த்தி (21) கண்டமங்கலம் ஆறுமுகம் (58), வில்லியனூர் வேலு (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்து, 6 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில், கன்னியப்பன், அவரது மகன்கள் சரத்குமார், ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன், கன்னியப்பன் மனைவி சுபா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. வேலு விடுதலை செய்யப்பட்டார்.
இதில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ.7 லட்சம், மற்ற 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சைமுத்து ஆஜரானார்.